தஞ்சகன் என்னும் அரக்கன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். மரணத்தருவாயில் பெருமாளை நோக்கி இத்தலத்தில் நரசிம்ம வடிவோடு ஸேவை சாதிக்க வேண்டும் என்றும் தனது பெயரால் இவ்வூர் 'தஞ்சபுரி' என்று அழைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான் என்று தலவரலாறு கூறுகிறது. இங்கு மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக பாடல் பெற்றுள்ளன.
முதல் கோயில் 'தஞ்சை மாமணிக் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. மூலவர் நீலமேகப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸ்ரீமந் நாராயணன். தாயாருக்கு செங்கமலவல்லி என்னும் திருநாமம். பராசர முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இரண்டாவது கோயில் 'மணிக்குன்றப் பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. மூலவர் மணிக்குன்றப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸ்ரீமந் நாராயணன். தாயாருக்கு அம்புஜவல்லி என்னும் திருநாமம். மார்க்கண்டேய முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
மூன்றாவது கோயில் 'தஞ்சையாளி நகர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. மூலவர் நரஸிம்மர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸ்ரீமந் நாராயணன். தாயாருக்கு தஞ்சை நாயகி என்னும் திருநாமம். மார்க்கண்டேய முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களும், பூதத்தாழ்வார் 1 பாசுரமும், நம்மாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 5 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இம்மூன்று கோயில்களும் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|